டிட்வா புயல் எதிரொலியாக நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ, சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் நவம்பர் 30-ம தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் நாகப்பட்டினம், , பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.




