காங்கோவில் சுரங்கத்தில் திடீரென பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கலண்டோவில் செப்பு (கோபால்ட்) சுரங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாகாண உள்துறை அமைச்சர் ராய் கவும்பா மயோண்டே கூறுகையில், சுரங்கத் தொழிலாளர்கள் தப்பி ஓட முயன்றதால் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், 20 பேர் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மாகாண ஒருங்கிணைப்பாளர் ஆர்தர் கபுலோ கூறுகையில், இப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முறைசாரா சுரங்கத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இந்த விபத்தையடுத்து சுரங்கத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.




