பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஒரு சாபக்கேடு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்னர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்த தினமான இன்று (நவம்பர் 26) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்," 2008-ம் ஆண்டு இதே நாளில், பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கி, ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலைச் செய்தனர். மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்ட துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
இந்த கோழைத்தனமான தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஒரு சாபக்கேடு. பயங்கரவாதத்திற்கு எதிரான பாஜக அரசின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கையை முழு உலகமும் பாராட்டுகிறது, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினர் ஆதரவை பெற்று இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.




