டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 டாக்டர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு - காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, தெலங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகரை சேர்ந்த தஜமுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் இடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அவரது தொலைபேசியையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.அவரிடம் நடந்த விசாரணையின் போது, அடுத்த ஆண்டு ஜனவரி 26- ம் தேதி தாக்குதல் திட்டம் இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியை நோட்டமிட்டு வந்ததாகவும் கூறினார்.
தீபாவளிக்கு மக்கள் நெரிசலான இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் முஸம்மில் கனி போலீஸாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.




