பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுத் திருட்டு நடந்ததாக சுமத்திய குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தலின் போது ஓட்டுத் திருட்டு நடந்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது மக்களை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பிஹார் தேர்தலில் ஓட்டுத் திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகளால் நிருபிக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குநர் அபூர்வ குமார் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் முடிந்த 7 நாட்களுக்குள் மின்னணு ஓட்டு இயந்திரத்தை சோதனை நடத்த கோரலாம். தேர்தலில் இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பிடித்த வேட்பாளர்கள் இந்த சோதனையை கோர முடியும்.
பிஹார் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த எந்த வேட்பாளரும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்ய கோரிக்கை வைக்கவில்லை. அதேபோல, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் குறித்தும் எந்த விண்ணப்பமும் கிடைக்கப்பெறவில்லை. அதேபோல, 2616 வேட்பாளர்களில் ஒருவர் கூட மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை விடுக்கவில்லை.
ஒரு தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,215 வாக்குச்சாவடிகளில் விவிபேட் சீட்டுகளில் கட்டாய சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. மின்னணு வாக்குச்சாவடியில் எந்த முரண்பாடும் கண்டறியப்படவில்லை. தேர்தல் முடிந்த 5 நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் தொடர்பான விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டு விட்டன. இதன்மூலம், வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்தல் தொடர்பான விபரங்களை அனைத்து தரப்பினருக்கும் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.


