சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள மாநில அரசு உடனடியாக செய்து தர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுவதாகவும், அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த 9 நாட்களில் மட்டும் தமிழர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிவரும் செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.
பிற கோயில்களைப் போலல்லாமல் 41 நாட்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் சபரிமலையில், கைக்குழந்தைகளுடன் பக்தர்கள் குவிவார்கள் என்பது அம்மாநில அரசுக்குத் தெரியாதா? அதுவும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தமிழகத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நாயகனை நோக்கி படையெடுப்பார்கள் என்பதைக் கேரள அரசு கணிக்கத் தவறிவிட்டதா அல்லது இந்து கடவுளைத் தரிசிக்க வருபவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் எனக் கைகழுவி விட்டுவிட்டதா?
இப்படி நாத்திக போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இந்துக்களை மறைமுகமாக வதைக்கும் பெரும் பாவம் தான், இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி அரசுகளை அரியணையில் இருந்து ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது.
எனவே, சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு உடனடியாக செய்து தர வேண்டுமெனவும், அதே போல தமிழகத்தில், திருச்செந்தூர் வரும் பக்தர்களை ஆடு மாடுகள் போல அடைத்து வைத்து மூச்சுக் காற்றிற்கு ஏங்க வைக்காமல், திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.



