நெடுஞ்சாலை பணிகளை செய்ய ரூ.2,000 கோடி டெண்டர் எடுத்ததில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் கீழ் நடந்த சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிறுவனம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன் நடத்தி வந்த நிறுவனம் வாயிலாக ரூ.2,000 கோடிக்கு டெண்டர் எடுத்ததில் அரசுக்கு ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் நண்பர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூா் மாநகராட்சியின் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற திருவண்ணாமலையைச் சோ்ந்த எஸ்.ஜெகதீசன், மதுரை விசாலாட்சிபுரத்தைச் சோ்ந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணி நிறுவனமான ஆா்.ஆா்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், தஞ்சாவூா் புதுப்பட்டினம் ஜோதி நகரில் உள்ள ஜேஎஸ்வி இன்ஃப்ரா நிறுவனம், கோவை ராமநாதபுரம் அருகே புளியங்குளத்தில் உள்ள கேசிபி என்ஜினீயா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள எஸ்பிகே அன்ட் அன்கோ நிறுவனம் ஆகியவற்றின் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




