மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தியாவில் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியன. இதனைத் தொடர்ந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். சாம்பியன் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் வீராங்கனைகள் காட்டிய நுணுக்கம், தண்னம்பிக்கை, பாராட்டுக்குரியது.உலகக் கோப்பை முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ஒருமித்த ஒத்துழைப்பு சிறப்பாக எதிரொலித்தது. எதிர்கால பெண் வீராங்கனைகளுக்கும் ஊக்கம் தரும் வெற்றியை இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.




