Hot News :

ஷேக் ஹசீனா செய்தது மனித குலத்திற்கு எதிரானது: சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அறிவிப்பு

© News Today Tamil

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக  அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். 

இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து  ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம்  அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை இன்று (நவம்பர் 17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.

மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் நீதிபதி கூறுகையில், " மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை ஷேக் ஹசீனா செய்துள்ளார். அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது. அதிகாரத்தில் நீடிக்க ஷேக் ஹசீனா அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். அவர், போராட்டக்காரர்களை கொல்ல ஹெலிகாப்டர் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தூண்டிவிட்டார். அவர்களை அவர் களங்கப்படுத்தினார்"  என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கு விசாரணையின் போது வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post காங்கோ சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் பலி
Next Post டெல்லி குண்டு வெடிப்பு: 25 இடங்களில் ஈ.டி சோதனை
Related Posts