சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே வழங்கப்படுவதாக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பிறகு பொது நிகழ்வில் பங்கேற்காத தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், "தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான வாக்குரிமையை பறிக்கும வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிகளை நிறுத்த வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தவெக தலைவர் விஜய்க்கும், அவரை காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.




