கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ) தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இப்பணியில் அனீஷ் ஜார்ஜ்(44) என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது அனீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளினால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், பணி அழுத்தம் காரணமாக அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை வெளியிட உள்ளதாக அந்த கட்சி கூறியுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




