வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் 16 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று (நவ.24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நவ.22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்து சென்யார் புயலாக உருவாகக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதேபோல குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் குமரிக்கடல்- தென்மேற்கு வங்க கடலில் புயல் சின்னமான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; மேலும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவள்ளூர்,
ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், சிவகங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர், கள்ளக்குறிச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




