ராஜபாளையம் அருகே கோயில் பாதுகாவலர்கள் இருவரை கொலை செய்தவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயிலுக்குள் நள்ளிரவில் ஒரு கும்பல் புகுந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து அந்த கும்பல் கொள்ளையடிக்க முயற்சி செய்தது. இதைத் தடுத்த கோயில் காவலர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியனை அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில்,கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிலரைபிடித்து விசாரித்தனர். அப்போது கொலையாளி என கருதப்படும் நாகராஜை போலீஸார் பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸாரை தாக்கி விட்டு அவர் தப்ப முயன்றார். ஆனால், போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முனியசாமி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.




