கள்ளக்குறிச்சியில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பிஎல்ஓ தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில்(எஸ்ஐஆர்) சிவனார்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஜாகிதா பேகம்(38) ஈடுபட்டிருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த சில தினங்களாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சுமார் 800 விண்ணப்பங்கள் கணினி வாயிலாக அப்டேட் செய்ய வேண்டிய நிலையில், ஜாகிதா பேகம் 80 விண்ணப்பங்களை மட்டுமே பதிவேற்றம் செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸார், ஜாகிரா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளதால் அது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




