மெட்ரோ ரயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்கி சர்ச்சையாக்கி விட்டதாக மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார்.
சென்னையைப் போல கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. பல்வேறு ஆய்விற்குப் பிறகு மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு சமர்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் திட்டப் புறக்கணிப்பை கண்டித்து கோவையில் இன்றும், மதுரையில் நாளையும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " தமிழக அரசின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சென்னையை விட கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என தமிழக அரசின் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையை விட குறைந்த தொலைவில் கோவையில் மெட்ரோ அமைக்கப்படும் நிலையில் எப்படி அதிகம் பேர் பயன்படுத்துவர்? .தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை, மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை,
கோவையில் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை. அடுத்தாக மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும் போது மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை, கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடியை ஒதுக்கியுள்ளதை மு.க.ஸ்டாலின் மறைத்துவிட்டார். இதுவரை யாருக்கும் வழங்காத வகையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், மக்களுக்கான மெட்ரோ ரயில் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்கி சர்ச்சையாக்கியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.




