பிஹார் முதல்வராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இன்று (நவம்பர் 20) பதவி ஏற்றார். இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிஹாரில் 2 கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பஸ்வான்)19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை பிடித்தன. இதையடுத்து பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது.
இதில் தற்போதைய முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிஹார் முதல்வராக 10வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிஹார் துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பதவியேற்றனர். பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




