மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என, ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார். அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது. கடந்த செப்., 11ல் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (நவ.,20) ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
அப்போது நீதிபதிகள், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் கால வரம்பின்றி நிறுத்தி வைக்க முடியாது. ஆளுநர் நீண்ட காலமாக மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் 200வ- து பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். நான்காவது வாய்ப்பு கிடையாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.




