தமிழ்நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் கூறினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்தார். பனையூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், “எம்.ஜி.ஆர் பின்னால் அணிவகுத்தவர்களில் நானும் ஒருவன். ஒரு தூய்மையான ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
அந்த புதிய மாற்றத்தைக் கொண்டு வர விஜய் முயற்சிக்கிறார். அதனால், அவருடன் கைகோர்த்துப் பயணிக்க உள்ளேன். தமிழ்நாட்டில் மாற்றங்கள் வரவேண்டும்” என்றார்.




