தவெக தலைவர் டிசம்பர் 4-ம் தேதி சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி சேலம் மாவட்டத்தில் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கோரி சேலம் போலீஸ் கமிஷனரிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர். ஆனால், விஜய் பிரசாரம் மேற்கொள்ள போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக சேலம் காவல்துறை தவெகவினருக்கு விளக்க கடிதம் அளித்துள்ளது. அதில்," டிசம்பர் .4-ம் தேதி வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை.
வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் இல்லை. குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும். அடுத்த முறை மனு அளிக்கும்போது 4 வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




