கோவைக்கு இன்று விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 19)பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில், ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் புனித ஆலயம் மற்றும் மகாசமாதிக்குச் சென்று, மரியாதை செலுத்தும் மோடி, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பார். இந்த விழாவில் சாய்பாபாவின் வாழ்க்கை, போதனைகளை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் மற்றும் தபால் தலைகளின் தொகுப்பை அவர் வெளியிடுகிறார்.
இதன்பிறகு கோவையில் மதியம் 1:30 மணியளவில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு பிஎம்-கிசான் திட்டத்தின் 21வது தவணையை பிரதமர் வெளியிடுவார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், " தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (நவம்பர் 19) மதியம், கோவை செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
நிலையான சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம். நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்" என்று தெரிவித்துள்ளார்.




