டெல்லியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பை டாக்டர் உமர் நபி தான் நடத்தினார் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை எதிரே நவ.10-ம் தேதி காரில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய மருத்துவக்குழு நாட்டில் பல இடங்களில் குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாத டாக்டர் குழுவில் இணைந்திருந்த உமர், தான் விலைக்கு வாங்கிய ஹூண்டாய் ஐ-20 காரில் வெடிபொருட்களை எடுத்துச் சென்று செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்துள்ளார்.
கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து உமரின் தாயின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்பீட்டு பரிசோதனை நடந்து வந்தது. அதில் கார் வெடிப்பு சம்பவத்தில், காரை ஓட்டியது டாக்டர் உமர் தான் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
உமர் தற்கொலை குண்டாக வெடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.




