ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து பன்றிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோவையில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மேற்கொண்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள வேலந்தாவளம், வாளையாறு உள்ளிட்ட 12 எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் பன்றி தீவனம் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல கோவை வழியாக கேரளா பன்றி பண்ணைகளுக்கு தீவனம் உள்ளிட்டவற்றை ஏற்றி சென்று விட்டு திரும்பி வரும் வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.
கோவையில் தற்போது வரை அதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறிய கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள்,. ஆனாலும், கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்பட சில இடங்களில் செயல்பட்டு வரும் பன்றி வளர்ப்பு பண்ணைகளை கண்காணித்து வருகிறோம். தற்போது பரவுவது ஏஎஸ்எப் வகை பன்றி காய்ச்சல் ஆகும். எனவே, வளர்ப்பு பன்றிகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் அளிக்கும்படி பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.




