உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று (நவம்பர் 24) பதவியேற்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர்.கவாய் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்கிறார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு , சூர்யகாந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்கும் சூர்யகாந்த் ஹரியாணாவை சேர்ந்தவர். இந்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவது முதல் முறையாகும். இவர் 2019 மே 24-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றவர். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உறுதி செய்த தீர்ப்பில் பங்களிப்பு செய்தார். பார் அசோசியேஷன்களில் மூன்றில் ஒரு மடங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தரவு, மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் தொடர்பான விசாரணைக் குழு நியமித்து உத்தரவு உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வுகளில் இடம் பெற்றிருந்தார். உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் சூர்யகாந்த், 2027 பிப்ரவரி 9-ம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார்.




