டெல்லியில் ஐஎஸ்ஐ தொடர்புடைய ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யயப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தொடர்புடைய ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் டெல்லியில் பதுங்கியிருப்பதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்த அஜய், மன்தீப், தல்விந்தர் மற்றும் ரோஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கும்பல், துருக்கி மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட உயர் ரக துப்பாக்கிகளை பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு சப்ளை செய்ததுடன், பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் பஞ்சாபில் ஆயுதங்கள் விற்பனை செய்தும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 10 விலை உயர்ந்த வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 92 தோட்டாக்களை போலீஸார் மீட்டனர்.
அவர்கள் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள குற்றவாளிகள் மற்றும் சதி செயலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இருவர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த கும்பல் இந்தியாவில் எத்தனை ஆயுதங்களை விற்றுள்ளனர். இந்த கும்பலுக்கு பின்ணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




