ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் இருந்து இஸ்பர்பாஷு நகருக்கு விமான உபகரணங்களை ஏற்றிக் கொண்டு கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் விமான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவன ஊழியர்கள் உள்பட 7 பேர் சென்றனர். வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென பழுது ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதனால் விமானி, ஹெலிகாப்டரை காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள அச்சிசு என்ற இடத்துக்கு அருகே தரையிறக்க முயன்றார். அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.
அதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து ரஷ்ய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.




