டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டது என்ஐஏ விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் நவம்பர் 10-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியாணாவின் ஃபரிதாபாதில் உள்ள அல்- ஃபலாஹ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி தான் வெடி பொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தவர் என தெரிய வந்தது.
அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில டாக்டர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.
ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காஸிகுந்த் பகுதியைச் சேர்ந்த ஜஸிர் பிலால் வானி, உமர்நபியுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உமர் நபி தாக்குதல் நடத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஜஸிர் பிலால் வானி வழங்கியுள்ளார்.
கைதான ஜஸிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டெல்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது அம்பலமானது. அத்துடன் இந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. சிரியா, ஈராக், இஸ்ரேல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஹமாஸ் மற்றும் ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதேபோல் டெல்லியில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என என்ஏஐ வட்டாரங்கள் தெரிவித்தன.




