ரூ.500 கோடி கொடுத்தால் தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்று பேசிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டபல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறி மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவை நவ்ஜோத் கௌர் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் எப்போதும் பஞ்சாப் நலனுக்காகவே பேசுவோம்.ஆனால், ரூ.500 கோடி பணம் கொடுப்பவருக்குததான் முதல்வர் பதவி கிடைக்கும். முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு எந்தக் கட்சிக்கும் கொடுப்பதற்கு எங்களிடம் ரூ.500 கோடி இல்லை. நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தால், அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார்.
பஞ்சாப்பை ஒரு சிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்றார். தங்களிடம் யாராவது பணம் கேட்டார்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, யாரும் கேடக்வில்லை. ஆனால், ரூ.500 கோடி பணம் கொடுப்பவர் தான் முதல்வர் ஆகிறார் என்று நவ்ஜோத் கௌர் சித்து பதிலளித்தார். இந்த கருத்து காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸின் பணப்பை அரசியல் அம்பலப்பட்டுள்ளதாக பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடரந்து தனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறி நவ்ஜோத் கௌர் சித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், " நவ்ஜோத் வேறு எந்தக் கட்சியில் இருந்தாவது முதல்வர் வேட்பாளராகிறாரா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, முதல்வர் பதவிக்கு கொடுக்க எங்களிடம் பணம் இல்லை என்று மட்டுமே நான் சொன்னேன். காங்கிரஸ் எங்களிடம் எந்தப் பணமும் கேட்கவில்லை என்ற எனது நேரடியான கருத்து திரிக்கப்பட்டுள்ளதை அறிந்து நாள் அதிர்ச்சியடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.




